மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 9 July 2020 5:45 AM IST (Updated: 9 July 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,261 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆகவும், சென்னையில் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவுக்கு நேற்று 64 பேர் பலி ஆனார்கள். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழந்த 64 பேரில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் வரை சென்னையில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

பெருந்தொற்று நோயான கொரோனா அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவராகவே கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் தனது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்த நேரத்தில்தான், கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணியையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 10 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

அமைச்சர் பி.தங்கமணி கடந்த வாரம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு ரூ.5 கோடியை வழங்கினார்.

மத்திய எரிசக்தித் துறை இணை மந்திரி ராஜ்குமார் சிங், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிகழ்ச்சியிலும், அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட மருத்துவ அறிக்கை கிடைத்ததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல், நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டுஉள்ளது. சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பீதி அடைந்து உள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசி இருக்கிறார்.

இதேபோல், மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக கடந்த 6-ந் தேதி இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே, இதில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story