தனியார் கல்லூரிகள் கல்விக்கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க அனுமதி ஐகோர்ட்டில் அரசு பதில் மனு


தனியார் கல்லூரிகள் கல்விக்கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க அனுமதி ஐகோர்ட்டில் அரசு பதில் மனு
x
தினத்தந்தி 9 July 2020 10:00 PM GMT (Updated: 9 July 2020 8:35 PM GMT)

தனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்குவது என்று முடிவு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கினால் பொதுமக்கள் வருவாய் இழந்துள்ளதால் தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ந்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கல்விக்கட்டணத்தை மொத்தமாக பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதற்கு பதில் தவணை அடிப்படையில் வசூலிப்பது குறித்து தமிழக அரசிடம் மனுதாரரின் சங்கம் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை மனு கொடுத்து முறையிடும்படி ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக உயர் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை எப்போது நடத்துவது? கலை-அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தற்போது கேள்வியே எழவில்லை.

ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பெற்றோரால், பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களை செலுத்த இயலாத நிலை உள்ளது.

தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து இருப்பு நிதி வைக்கப்படுவது உண்டு. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் அந்த இருப்பு நிதியை பயன்படுத்தி ஊதியம் வழங்கலாம். அதனால் தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் நிதியில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில், மனுதாரர் சங்கம், தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தது. இந்த மனுவை பரிசீலித்த அரசு, கல்வி கட்டணத்தை வருகிற ஆகஸ்டு, டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் என்று 3 தவணைகளாக வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Next Story