சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவான நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவான நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2020 3:45 AM IST (Updated: 10 July 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது வரை நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறும், கைது செய்யப்பட்ட போலீசாரை விரைவாக காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணை செய்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ், சுழற்சி முறையில் சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்த இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வக்கீல், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் இறந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையம், ஆஸ்பத்திரியில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன“ என்று தெரிவித்தார்.

பின்னர் சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல், “சாத்தான்குளம் வழக்கு விசாரணையை ஏற்பதற்காக நாளை (அதாவது இன்று) டெல்லியில் இருந்து மதுரைக்கு சிறப்பு விமானத்தில் 7 சி.பி.ஐ. அதிகாரிகள் வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. சிறப்பு பிரிவு விசாரிக்க உள்ளது. நாளையே அவர்கள் விசாரணையை தொடங்க உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர தமிழக அரசின் முதன்மை செயலாளரிடம் கேட்டுள்ளோம்“ என்றார்.

விசாரணை முடிவில், “தேவையற்ற விசாரணையானது, வழக்கில் தொடர்புடையவர்களையும், கோர்ட்டு விசாரணையையும் பாதிக்கும். எனவே சாத்தான்குளம் சம்பவத்தை அனைத்து தரப்பினரும் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம்“ என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கில் கைதானவர்களை 15 நாட்களுக்குள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. போலீசார் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கும் சி.பி.ஐ. போலீசார், இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்ட விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story