கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை செப்டம்பர் மாதம் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அதுபற்றி முடிவு எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரி, மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு (யு.சி.ஜி.) அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று எழுச்சி பெற்று வருவதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நோய் பரவலை கட்டுப்படுத்துவதோடு, தொற்றுக்கு ஆளானவர்களுக்கு விரிவான அளவில் சிகிச்சையையும் எனது
அரசு அளித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நல்ல பலன் கிடைத்தாலும், இன்னும் மாநிலத்தில் கொரோனா தொற்று சவாலாகத்தான் இருக்கிறது.
தமிழக அரசின் முற்போக்கு கொள்கைகளினால் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் சதவீதம் 49 ஆக உள்ளது. இது மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகம் ஆகும். அவர்களுக்கான ‘செமஸ்டர்’ தேர்வை கடந்த ஏப்ரலில் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.
கடந்த ஏப்ரல் 29-ந் தேதியன்று பல்கலைக்கழக மானிய குழு, தேர்வை நடத்துவதற் கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. இதில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு தேர்வை நடத்த தளர்வைக் கொடுத்தது. அரசு உத்தரவுக்கோ அல்லது வேறு ஆணைகளுக்கோ எந்த தடையையும் யு.ஜி.சி. பிறப்பிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில், இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைசி ‘செமஸ்டர்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பரில் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த புதிய வழிகாட்டியில் பல்வேறு தடைகளும், இடையூறுகளும் இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் பலர் வெளி மாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்கள், சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். இதனால் தேர்வு மையங்களுக்கு அவர்கள் வர முடியாத சூழ்நிலை உள்ளது.
‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளால், ‘ஆன்லைன்’ தேர்வை நடத்த உகந்த சூழ்நிலை எழவில்லை. அதோடு, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் (விடுதிகள் மற்றும் வகுப்பறைகள்) கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
இந்த மையங்கள் கொரோனா சிகிச்சைக்காக மேலும் சில காலம் தொடர வேண்டும். செப்டம்பர் வரை காத்திருந்தும் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டால் கல்லூரி இறுதி ஆண்டில் (கடைசி செமஸ்டர்) உள்ள மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும். வளாக நேர்காணல் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், சர்வதேச பயணத் தடை விலக்கப்பட்ட பிறகு, வரும் அக்டோபரில் வெளிநாட்டில் கல்வியில் சேர விண்ணப்பித்துள்ளவர்கள் போன்றவர்களின் எதிர்காலத்தை தேவையில்லாமல் பாதிக்கச் செய்துவிடும்.
இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவதில்லை என்று பல மாநிலங் கள் முடிவெடுத்து உள்ளன. மாணவர்களின் எதிர்காலம், சம வாய்ப்புகள், சுகாதார பாதுகாப்புகள் போன்ற காரணங்களுக்காக கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், சொந்த மதிப்பீட்டு முறையில் செயல்பட மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
எனவே மாநிலத்தில் உள்ள கொரோனா தொற்றின் நிலைக்கு ஏற்ப மாநிலங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, உயர் அதிகாரம் கொண்ட யு.ஜி.சி., ஏ.ஐ. சி.டி.இ., கட்டிடக்கலை கல்விக்குழு (சி.ஓ.ஏ.), இந்திய பார்மசி கவுன்சில், என்.சி.டி.இ., தேசிய ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப கவுன்சில் போன்ற அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நீதி வழங்குவதாக அமையும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story