கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் - மருத்துவமனை தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் - மருத்துவமனை தகவல்
x
தினத்தந்தி 11 July 2020 10:46 PM GMT (Updated: 11 July 2020 10:46 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் குணம் அடைந்து வருகிறார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் என அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அங்கு அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு, கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்ததை தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கடந்த 30-ந்தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை உறுதி செய்தது. அதன்பின்னர், அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் கே.பி.அன்பழகனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர்ராஜூ ஆகியோருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. அவர்களும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல்நிலை குறித்த அறிவிப்பை அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் நேற்று வெளியிட்டார்.

அதில், ‘சென்னையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா தொற்றில் இருந்து நன்றாக குணம் அடைந்து வருகிறார். அவர் தனி அறையில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story