தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2020 11:31 PM GMT (Updated: 11 July 2020 11:31 PM GMT)

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்காக கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் 2 குழுக்களாக நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்து விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா, ஜெயராஜின் சகோதரி ஜெயா, அவரது கணவர் ஜோசப், உறவினர் ஜெயசிங் ஆகியோர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பெர்சிக்கு அம்மை நோய் தாக்கப்பட்டதால், அவர் தனி அறையில் வைக்கப்பட்டு உள்ளார். அங்கு சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் சென்று, பெர்சியிடம் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் அறிக்கையில் உள்ள கேள்விகள் அனைத்தும் உண்மை தானா, ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியது உண்மையா? என்பது குறித்து கேட்டறிந்து, அவற்றை செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து மாலை 3.55 மணிக்கு சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் அனுராக் சின்கா தலைமையில் 3 பேர் காரில் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அவர்களுடன் ஜோசப் சென்றார். அவருக்கு இந்தி தெரியும் என்பதால் அவரை அதிகாரிகள் உடன் அழைத்து சென்றனர். அவர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடம், கண்காணிப்பு கேமரா இருந்த இடம் ஆகியவற்றை நேரில் காண்பித்தார்.

மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர் ஒருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மாலை 4.45 மணிக்கு விசாரணையை முடித்து விட்டு, அதிகாரிகள் மீண்டும் ஜெயராஜ் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதற்கிடையே, ஜெயராஜ் வீட்டில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டு மாலை 6.30 மணிக்கு வெளியே வந்தனர். அதாவது சுமார் 7 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். பின்னர் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் அனைவரும் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். அங்கு சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர்.

முன்னதாக விசாரணை மதியத்திற்கு மேலும் நீடித்ததால் கடையில் இருந்து சாப்பாடு கொண்டு வரப்பட்டு ஜெயராஜ் வீட்டில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாப்பிட்டனர்.

Next Story