தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை


தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2020 5:51 AM IST (Updated: 13 July 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் 5-வது எண் அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது அலுவலகத்தை அமைத்தனர். அங்கு தங்களுக்கு தேவையான கணினி உள்ளிட்ட பொருட் களை வரவழைத்தனர். பின்னர் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதற்கிடையே திடீரென்று மாலை 4 மணிக்கு சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 6 பேர் கார்களில் சாத்தான்குளம் விரைந்தனர். முதலில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நாகராஜன் உள்ளிட்ட போலீசார் இருந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு இடையே சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து சிறிது நேரம் செல்போனில் பேசி விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை 19-ந் தேதி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தது யார், எந்த புகாரின் அடிப்படையில் அவர்களை அழைத்து வந்தார்கள் என்று விசாரித்தனர். மேலும் கைது செய்யப்பட்டது குறித்து அவர்களின் குடும்பம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? போலீசாருக்கும், ஜெயராஜ் குடும்பத்துக்கும் முன்விரோதம் ஏதாவது இருந்ததா? என்பன உள்ளிட்டவை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை இரவு 7.40 மணி வரை நீடித்தது.

பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் காரில் இருந்தவாரே பஜார் பகுதியில் இருந்த பென்னிக்ஸ் கடையை பார்வையிட்டு சென்றனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளம் கோர்ட்டிற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் கள ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story