12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட உள்ளது. அதற்காக மேற்கண்ட வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து உரிய ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் ‘ஹைடெக் லேப்’ மூலம் ‘வீடியோ பாடங்கள்’ 15-ந் தேதி(நாளை) முதல் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களுடைய மடிக்கணினியை பள்ளிக்கு வருகை புரியும் போது கொண்டு வரவேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ‘வீடியோ பாடங்கள்’ பதிவிறக்கம் செய்து தரவேண்டும் என்பதால், அந்த பள்ளியில் பணியாற்றும் முதுகலை பாடம் அல்லது கணினி ஆசிரியர் மடிக்கணினி அல்லது பென்டிரைவ் எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ‘ஹைடெக் லேப்’ மூலம் ‘வீடியோ பாடங்களை’ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், அவர்கள் தங்களுடைய பள்ளிக்கு சென்று அவர்களுடைய கணினி ஆய்வகத்தில் உள்ள கணினிகளில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு, அவர்களுடைய மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும். எனவே, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்பணி மிகவும் இன்றியமாதது என்பதால் எவ்வித சுணக்கமும் இன்றி மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story