தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் - தலைமை தேர்தல் கமிஷனருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணைய தலைமை கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், சட்டத்திற்கு புறம்பாக, ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2019‘ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020‘ ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் உள்ள திருத்தங்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை ‘பங்கேற்காத வாக்காளர்கள்‘ பிரிவின் கீழ் சேர்ப்பதாக உள்ளது. கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு நடத்தாமல் இந்த திருத்தங்களை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. மேலும் இந்த முடிவு சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை அழித்துவிடும்.
‘பங்கேற்காத வாக்காளர்கள்‘ முறை போலி வாக்காளர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பாக அமையும். புதிய திருத்தங்கள், மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவையாற்றுபவர்களை ‘பங்கேற்காத வாக்காளர்கள்‘ என்ற பட்டியலில் வகைப்படுத்துகிறது. 2020 திருத்தத்தில் மூத்த குடிமக்களுக்கான வயது 80ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தற்போதைய திருத்தத்தின்படி தபால் ஓட்டு போடுவதற்கு தகுதியானவர்கள். இது தேவைப்படும் பிற இயலாமை ஆணைக்கு முற்றிலும் எதிரானது. எனவே தபால் ஓட்டு போடுவதற்கு வயது அடிப்படையில் கொடுக்கப்பட்ட திருத்தம் சட்டவிரோதமானது.
கொரோனா வைரசை காரணம் காட்டி மூத்த குடிமக்களாக வகைப்படுத்தப்பட்டவர்களுக்கான வயதை 80ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. இது தபால் ஓட்டு போடுவதற்கான வயதை 65 என்று பொய்யாக கூறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் தேர்தல் நேரத்தில் நிறைய முறைகேடுகளையும் உருவாக்கும். இதேபோல 65 வயது அடைந்தவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போடுவதற்கு படையெடுப்பார்கள். புதிய திருத்தம் அனைத்து மூத்த குடிமக்களும் தபால் ஓட்டுக்கள் போடுவதை தடுக்காது. 65 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் தங்கள் வீட்டில் இருந்து சில கி.மீ. தூரம் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதற்கு தகுதி இல்லாதவர்களாக இருப்பது இல்லை.
5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த ஜனநாயக கடைமையாற்றுவதற்கு சில மணி நேரங்களே ஆகும். இதனால் இந்த புதிய திருத்தம் நிதி சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டவிரோதத்துக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வாக்குகளை இடையில் புகுந்து மாற்றுவதற்கும், சாதகவாதத்துக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் இருக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றவர்களை போன்று எந்த பாகுபாடும் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர். ஆனால் இந்த புதிய விதி 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சமுதாயத்தில் இருந்து துண்டிப்பதோடு, தேர்தல்களில் பங்கேற்பதில் இருந்தும் தேர்தல் ஆணையம் விலக்கி வைக்கிறது.
65 வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் என்றால் விதிகளை திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நிரந்தர திருத்தமாக கொண்டுவரப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று தொடர்ந்து இருக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறதா? என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த 1-ந்தேதியிட்ட தேர்தல் ஆணைய கடிதத்தில் இந்த திருத்தங்கள் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், டெல்லி மாநில மூத்த குடிமக்களுக்காக, இந்த திருத்தத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் ஆலோசனை பெறாமல் பெரிய மாநிலமான தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.
எனவே இந்த முடிவு தன்னிச்சையானது மட்டுமின்றி நியாயமற்றதும் கூட. இந்த திருத்தத்தை தொடர விரும்பினால் ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தவேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நிரந்தர விதியாக கொண்டுவரக்கூடாது. ஜார்க்கண்ட், டெல்லி போன்ற சிறிய மாநிலங்கள் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு சமமானதா? எனவே தேர்தல் நடத்தும் சட்டத்திருத்தம் விதிமுறை, 2019 மற்றும் தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை 2020 ஆகியவற்றை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவேண்டும். மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உடன் கூட்டங்களை நடத்தி, சுதந்திரமாக வாக்களிக்கும் சட்டரீதியான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறந்த தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story