புதிய உச்சம் தொட்டது: தமிழகத்தில் ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா - 13 வயது சிறுமி உள்பட 67 பேர் பலி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 13 வயது சிறுமி உள்பட 67 பேர் பலியாகினர்.
சென்னை,
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 19 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 40 பேர் உள்பட 4 ஆயிரத்து 526 பேர் புதிதாக கொரோனாவால் பதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 723 ஆண்களும், 1,803 பெண்களும் அடங்குவர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையில் இதுவரை இல்லாத அளவுக்கு 450 பேரும், திருவள்ளூரில் 360 பேருக்கும் ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 743 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். சென்னையில் மட்டும் 1,858 பேர் குணம் அடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 97 ஆயிரத்து 310 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் என மொத்தம் 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 18 பேரும், திருச்சியில் 6 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேரும், விருதுநகர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரியில் தலா இருவரும், கோவை, காஞ்சீபுரம், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
13 வயது சிறுமி
தமிழகத்தில் நேற்று சிவங்கையை சேர்ந்த 13 வயது சிறுமியும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். ஏற்கனவே சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, உடல் நிலை சரி இல்லாததால் கடந்த 6-ந்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி இறந்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 39 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 16 லட்சத்து 25 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story