‘21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உலகுக்கு நிரூபிப்போம்’ - வெங்கையா நாயுடு சபதம்
தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் மூலம் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உலகுக்கு நிரூபிப்போம் என்று சர்வதேச இளைஞர் திறன் தினத்தையொட்டி வெங்கையா நாயுடு சபதம் ஏற்றுள்ளார்.
சென்னை,
சர்வதேச இளைஞர் திறன் தினத்தையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு, சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான திசையில் ஒரு முக்கிய படியாகும். ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்‘ திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மறு தொடக்கம் செய்வதற்கும், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தான் எல்லா நாடுகளுக்கும் எதிர்காலம் என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மேலும் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இதனால் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வேலைவாய்ப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், தன்னம்பிக்கையின் வேகத்தை துரிதப்படுத்துவதற்கும் திறன்களை மேம்படுத்துதல் அல்லது இளைஞர்களை மேம்படுத்துவது காலத்தின் தேவை ஆகும்.
சர்வதேச இளைஞர் திறன் தினம்
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மெய்நிகர் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படும் சர்வதேச இளைஞர் திறன் தினத்துக்கான ‘நெகிழ வைக்கும் இளைஞர்களுக்கான திறன்கள்‘ என்ற கருப்பொருளை சரியான முறையில் தேர்ந்தெடுத்துள்ளது. நாளைய வேலைகளுக்கு தேவையான திறன்கள் இன்றயை இளைஞர்களின் திறமைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
அவர்கள் வேலைவாய்ப்பு திறன்களை பொறுத்தவரை நெகிழ்ச்சியுடன் இருக்கவேண்டியது மட்டுமல்லாமல், எந்தவொரு சூழ்நிலையையும் அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புதிய இடையூறுகளையும் உணர்வு ரீதியாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்‘ திட்டத்துக்கான அழைப்பின் பின்னணியில் உள்ளூரில் இருந்து சர்வதேசம் என்ற முனைப்புடன் சில உறுதியான முன்னேற்றங்கள் உள்ளன.
சுயசார்பு பொருளாதாரம்
கொரோனா வைரசை எதிர்கொள்ள லட்சக்கணக்கான முழு உடல் கவசங்களின் உற்பத்தி, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய ஆட்டோமொபைல் துறைகளின் ஒத்துழைப்பு, டி.ஆர்.டி.ஓ. மூலம் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தில் தயாரித்தல், ஐ.ஐ.டி. ரூர்க்கியின் குறைந்த விலையில் வென்டிலேட்டர் உருவாக்கம், கர்நாடகாவில் எக்ஸ்ரே மூலம் கொரோனா வைரசை கண்டறிவதற்கான சாதனம் உள்பட இந்திய விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எந்த சவாலையும் எதிர்கொண்டு, இந்த சந்தர்ப்பத்தில் திறனுக்கான சில எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.
எதிர்பார்க்காத இந்த நெருக்கடியை நாம் ஒரு சுயசார்பு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தவேண்டும்.
21-ம் நூற்றாண்டு
உயர்தர மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றில் இறக்குமதியை குறைக்கவும், விலைமதிப்பற்ற அந்நிய செலாவணியை காப்பாற்றவும் இந்தியா உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கவேண்டும். 130 கோடி இந்தியர்களும் தொற்று நோயால் ஏற்படும் பின்னடைவுகளை சமாளிப்பதற்கான நாட்டின் மனக்கட்டுப்பாடு, உறுதிப்பாடு மற்றும் கூட்டுத் தீர்மானத்தை வெளிப்படுத்தவேண்டிய நேரம் இது.
இந்தியாவின் மனித வளங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பயன்படுத்துவதன் மூலம் நாம் முன்னேறவேண்டும். தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் மூலம் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நாம் உலகுக்கு நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story