ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் - ஆய்வறிக்கையில் தகவல்


ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் - ஆய்வறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 16 July 2020 2:45 AM IST (Updated: 16 July 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே ஊடரங்கு காலகட்டத்தில் அதிக புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக திட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, 

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஊரடங்கினால் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களும் உள்ளனர். எனவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் அதிக முதலீடுகளை வரவழைத்த மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. அதிக முதலீடுகளைக் குவித்த முதல் 10 மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் மராட்டியம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

தமிழக அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக மராட்டியம் ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக் கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2,500 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களோடு, தனியார் நிறுவனங்களின் திட்டங்களும் உள்ளன என்றும், ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நல்ல அறிகுறி என்றும் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Next Story