முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை 8 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை விவரங்களை 8 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. ஆனால் எவ்வளவு நன்கொடை நிதி? யார்-யாரிடம் இருந்து பெறப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை அரசு வெளியிடுவது இல்லை. எனவே, இந்த விவரங்களை அரசின் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு தமிழக அரசு அளித்த பதில் மனுவில், ‘ ஊரடங்கு காரணமாக குறைவான ஊழியர்கள் உள்ளதால், உடனுக்குடன் தொகை விவரங்களை வெளியிட காலதாமதம் ஆகுகிறது. மற்றபடி நன்கொடை விவரங்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடப்படுகிறது’ என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘கடந்த ஜூன் 25-ந்தேதி வரை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.382 கோடியே 89 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது” என்று கூறினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற தொகை விவரம், நிதி வழங்கியவர்கள் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அரசு இணையதளத்தில் 8 வாரத்திற்குள் வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story