மாநில செய்திகள்

கடல், ஆறுகளில் புனித நீராட தடை நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை களையிழந்தது + "||" + Prohibition of sacred bathing in the sea and rivers

கடல், ஆறுகளில் புனித நீராட தடை நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை களையிழந்தது

கடல், ஆறுகளில் புனித நீராட தடை நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை களையிழந்தது
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீர் நிலைகளில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்ததால், முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஆடி அமாவாசை நேற்று களையிழந்தது. ராமேசுவரம், திருச்சி அம்மா மண்டபம், பவானி கூடுதுறை போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை,

ஆடி மாதம் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நாளாக கருதப்படுகிறது.

இந்துக்கள், ஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்கு (நம்முடைய முன்னோர்கள்) திதி கொடுப்பது வழக்கம். அன்றைய தினம் கடற்கரை, ஆற்றாங்கரை, கோவில் தெப்பக்குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.


இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினம் நேற்று வந்தது. ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூடுவதைகட்டுப்படுத்துவதற்காக நீர்நிலைகளுக்கு சென்று புனித நீராடிவிட்டு அங்கு திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

எனவே எங்கு வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள சிவாலயங்களின் அருகே தர்ப்பணம் கொடுத்தனர்.

இதனால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, திருச்சி அம்மா மண்டபம் படித்துறை, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, கன்னியாகுமரி கடற்கரை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை போன்ற நீர்நிலைகளுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று யாரும் வரவில்லை. இதனால் அந்த இடங்கள் வெறிச்சோடியதோடு, ஆடி அமாவாசை களையிழந்து காணப்பட்டது.

முக்கிய பரிகார தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் ராமேசுவரம் கோவிலும், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளும் பக்தர்கள் நடமாட்டம் இன்றி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஆடி அமாவாசை தினமான நேற்றும் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் புனித நீராட கூட்டமாக வரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அக்னி தீர்த்த கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. உள்ளூர் புரோகிதர்களும் தர்ப்பண பூஜை செய்வதில்லை என்று அறிவித்து இருந்ததால் ராமேசுவரம் மக்களும் கடலில் குளிக்கவோ, தர்ப்பண பூஜை செய்யவோ வரவில்லை.

ராமேசுவரம் வந்த அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்தனர். குறிப்பாக தர்ப்பணம் செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தில் ராமபிரான், கோவிலில் இருந்து புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளுவார். அதன் பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கோவிலுக்குள் உள்ள சிவதீர்த்தத்தில், பக்தர்களுக்கு அனுமதியின்றி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி காவிரி கரையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை 2 நாட்களுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. மேலும் திதி கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்தும் புரோகிதர்களும் ஆடி அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதற்காக யாரும் வரவேண்டாம் என அறிவித்து இருந்தனர். இதனால் நேற்று அம்மா மண்டபம் படித்துறையில் திதி கொடுப்பது நடைபெறவில்லை. அரசு உத்தரவையும் மீறி திதி கொடுப்பதற்காக வந்த சிலரையும் போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

திதி கொடுக்க முடியாமல் தவித்த பக்தர்கள் பலர் ஓயாமரி சுடுகாடு பகுதியில் உள்ள தில்லைநாயகம் படித்துறையில் புனித நீராடினார்கள். போலீஸ் பாதுகாப்பையும் மீறி அங்கு 2 பேர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முயற்சித்தனர். அவர்களை போலீசார் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் தடை விதித்து இருந்ததால், பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறைக்கும் யாரும் திதி கொடுக்க வரவில்லை.

ஆடி அமாவாசையன்று திதி கொடுப்பதற்காக குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வருவார்கள். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

ஆனால் தடையின் காரணமாக திதி கொடுப்பதற்காக நேற்று யாரும் கன்னியாகுமரி கடற்கரையில் திதி கொடுக்கவில்லை. இதனால் கடற்கரை, காந்தி மண்டபம் பஜார், சன்னதி தெரு, பழைய பஸ் நிலையம் போன்ற பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. சிலர் இருசக்கர வாகனங்களில் தர்ப்பணம் கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி ஆறு, குளங்களில் குவிந்தவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் காரையாறு காணிக்குடியிருப்பில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊடரங்கு காரணமாக ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று அங்கு யாரும் திதி கொடுக்க வரவில்லை.

இதேபோல் பாபநாசம் தாமிரபரணி படித்துறையிலும் நேற்று யாரும் திதி கொடுக்கவில்லை. அங்கு பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

சென்னையை பொறுத்தமட்டில் ஆடி அமாவாசையன்று மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் நேற்றைய தினம் கடற்கரைகளில் மிகவும் குறைவான நபர்களே வந்து முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்துச் சென்றார்கள்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் தர்ப்பணம் கொடுத்தார்கள். அப்போது பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு
மாமல்லபுரத்தில் நேற்று கடலில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதி வரை 20 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உட்புகுந்ததால் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது.
2. கடல் உள்வாங்கி, மணல் பரப்பாக மாறியது
கடல் உள்வாங்கி, மணல் பரப்பாக மாறியது
3. கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி
கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
4. தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்: ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது
தனுஷ்கோடி பகுதியில் நேற்றும் கடல் சீ்ற்றம் தொடர்ந்தது. ராமேசுவரத்தில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது. இதனால் மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன.
5. மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.