கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு போட்டிப்போடும் மாணவர்கள் 5 நாட்களில் 73 ஆயிரம் பேர் விண்ணப்பம்


கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு போட்டிப்போடும் மாணவர்கள் 5 நாட்களில் 73 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 21 July 2020 5:12 AM IST (Updated: 21 July 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் போட்டிப்போடுகின்றனர். கடந்த 5 நாட்களில் 73 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த நிலையில், கடந்த கல்வியாண்டு (2019-20-ம் ஆண்டு) முதல் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அதன்படி, 2020-21-ம் கல்வியாண்டு என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ‘இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார். அவர் கூறியது போலவே, ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் பலரும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருவது அதற்கான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கிய விண்ணப்பதிவு, அதற்கு மறுநாளான 16-ந்தேதி மாலை 5 மணி நிலவரப்படி, 23 ஆயிரத்து 583 பேர்(ஒரேநாளில்) விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பிக்க தொடங்கி இருக்கின்றனர்.

5-வது நாளான நேற்று நிலவரப்படி 17 ஆயிரத்து 768 பேர் விண்ணப்பித்து, மொத்த விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இதில் 51 ஆயிரத்து 525 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிட்டனர்.

கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு தொடங்கிய 5 நாட்களில் 73 ஆயிரத்தை கடந்து இருப்பதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். கிட்டதட்ட 3 வாரங்களுக்கு மேல் இன்னும் விண்ணப்பிக்க காலஅவகாசம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Next Story