ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் அவசர சட்டத்துக்கு தடை இல்லை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு


ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் அவசர சட்டத்துக்கு தடை இல்லை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 July 2020 5:43 AM IST (Updated: 21 July 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு இடைக் கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கூட்டுறவு வங்கிகளான பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி, வேலூர் கூட்டுறவு நகர்புற வங்கி சார்பில் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக உள்ளது” என்று வாதிட்டார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, ‘நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், ரூ.7.27 லட்சம் கோடிக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வங்கியை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘வங்கி தொடர்பான பணிகளை கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்ளும்போது, அதுகுறித்து சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கில், அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை கேட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்கக்கூடாது. இந்த அவசர சட்டம் கொண்டு வந்தது ஒன்றும் சட்டவிரோதம் இல்லை. எனவே, இந்த காலக்கட்டத்தில் அவசர சட்டத்தில் தலையிடக்கூடாது. இந்த சட்டம் செல்லத்தக்கதா? என்று இந்த ஐகோர்ட்டு ஆய்வு செய்வதற்கு முன்பு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு, ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கூறினர்.

மேலும் மனுதாரர்களான கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளில் இந்த அவசர சட்டம் உடனடியாக தலையிடும் நிலை உள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே மனுதாரர்கள் கோரும் இடைக்கால தடை குறித்து தற்போது பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.

ஒருவேளை இந்த அவசர சட்டத்தை பயன்படுத்தி, மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ, மனுதாரர்களின் கூட்டுறவு வங்கிகளின் உரிமையில் தலையிடும் விதமாக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொண்டு வந்தால், இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க பரிசீலிக்கப்படும். அவசர சட்டத்தை ரத்து செய்ய கோரும் மனுதாரர்களின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் உத்தரவிடுகிறோம். இந்த பதில் மனுவுக்கு மனுதாரர்கள் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற செப்டம்பர் 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story