முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தற்கொலை முயற்சி?
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி நேற்றிரவு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரின் கணவர் முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் சிறையிலிருந்து தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென நளினி பல முறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவரை புழல் சிறைக்கு மாற்றப்படவில்லை.
இந்த நிலையில் நளினி சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில்
"கடந்த 29 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றோரு ஆயுள் கைதிக்கும் நளினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக ஜெயிலர் அல்லிராணியிடத்தில் அந்த கைதி புகார் கூறியுள்ளார். நேற்றிரவு ஜெயிலர் அல்லிராணி லாக்கப்புக்கு வெளியே நின்றவாரே நளினியிடத்தில் விசாரணை நடத்தியுள்ளார்.
இதனால், மன வருத்தமடைந்த நளினி விசாரணை நடந்து கொண்டிருந்த போதே தூக்கு போட முயன்றுள்ளார். தொடர்ந்து, ஜெயிலர் அல்லிராணி உள்ளே சென்று நளினியின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினார். சிறையில் இருந்த 29 வருடங்களில் நளினி தற்கொலைக்கு முயன்றதில்லை. ஆனால், தற்கொலை செய்ய முயன்றதற்கு இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா எனத் தெரியவில்லை'' என்றார்.
நளினி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story