திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் போலீஸ் காவல் நிறைவு


திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் போலீஸ் காவல் நிறைவு
x
தினத்தந்தி 22 July 2020 2:01 PM IST (Updated: 22 July 2020 2:01 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் போலீஸ் காவல் இன்று நிறைவடைந்தது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் அம்மன் கோவில் நிலத்தில் பாதை அமைப்பது தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார்.

இந்த மோதல் தொடர்பாக எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும், இமயம்குமார் தரப்பை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். எம்.எல்.ஏ. இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி பயன்படுத்திய 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக திருப்போரூர் போலீசார், எம்.எல்.ஏ. இதயவர்மனை பூந்தமல்லி தனி கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மனுவை விசாரணை செய்த நீதிபதி, எம்.எல்.ஏ. இதயவர்மனை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனின் போலீஸ் காவல் இன்று நிறைவடைந்தது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு இதயவர்மனை இன்று காலை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் பற்றி இதயவர்மனிடம் போலீசார்கள் விசாரணை நடத்தினர் .

Next Story