பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வி வேந்தர் ஐசரி கணேஷ் அறிவிப்பு


பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வி வேந்தர் ஐசரி கணேஷ்  அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2020 2:15 AM IST (Updated: 23 July 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் செவிலியர், போலீஸ், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா கல்வி அளிக்கப்படும் என பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான முன்களப்பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.

அதன்படி, கொரோனா தடுப்பு களப்பணிகளில் இருக்கும் செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்பை முழுவதுமாக கட்டணமில்லாமல் படிக்க முடியும். இதற்கு அவர்களின் பிள்ளைகள் இந்த கல்வியாண்டில் (2019-20-ம் ஆண்டில்) பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.

இந்த 3 துறை பணியாளர்களின் பிள்ளைகளுக்காக ஒரு துறைக்கு 100 இடங்கள் என மொத்தம் 300 இடங்கள் ஒதுக்கப்பட்டு, 300 மாணவ- மாணவிகள் கட்டணமில்லா கல்வி மூலம் பயன்பெற இருக்கின்றனர். இதில் கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

இந்த கட்டணமில்லா கல்வியை பெற விரும்பும் மாணவ-மாணவிகள் பதிவு செய்து பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9003461468, 9952018671, 8807307082, 9445507603, 9445484961, 9962014445 என்ற செல்போன் எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். மேலும், வேல்ஸ் பல்கலைக்கழக ஊழியர்களை நேரில் அணுகியும் விவரங்களை அறியலாம்.

இந்த அசாதாரண நேரத்தில் நம்மை பெருந்துயரில் இருந்து பாதுகாத்து வரும் களப்பணியாளர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களையும், தனியார் பல்கலைக்கழக வேந்தர்களையும் உதவிசெய்திட முன்வருமாறு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கண்ட தகவல் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story