இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், நல்லக்கண்ணு மீது அவதூறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், நல்லக்கண்ணு மீது அவதூறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2020 5:22 AM IST (Updated: 23 July 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், ஆர்.நல்லக்கண்ணு மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தையும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவையும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை தியாகராயநகரில் உள்ள பாலன் இல்லத்தின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சி.மகேந்திரன், டி.எம்.மூர்த்தி, எஸ்.ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சி சார்பில் உ.பலராமன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குன்னக்குடி அனீபா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறுகையில், “கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத அமைப்புகள் பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது, தலைவர்களை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக 2 புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை உணர்ந்து, மத கலவரம், சாதி கலவரம், கடவுள் பெயரால் சண்டைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டும்“ என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, “கொரோனா பரவலை தடுப்பதில் ஏற்பட்ட தோல்விகளை திசை திருப்ப இதுபோன்ற பிரச்சினைகள் மூலம் மத்திய. மாநில அரசுகள் சதி செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அளித்த 2 புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்“ என்றார்.

Next Story