7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் 2 ஆண்டுகள் ஆகியும் முடிவு எடுக்காததால் ஐகோர்ட்டு அதிருப்தி


7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானம் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் 2 ஆண்டுகள் ஆகியும் முடிவு எடுக்காததால் ஐகோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 23 July 2020 5:24 AM IST (Updated: 23 July 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லை எனில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “புழல் சிறையில் என்னுடைய மகன் அடைப்பட்டுள்ளான். சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பேரறிவாளன், இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அவருக்கு 90 நாட்கள் ‘பரோல்’ வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “பேரறிவாளன் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 90 நாட்கள் பரோலில் வெளியில் வந்துள்ளார். அதனால், சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவருக்கு மீண்டும் ‘பரோல்’ வழங்க முடியும்” என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர்தான் பரோல் வழங்க வேண்டும் என்று அரசு காத்திருக்க தேவையில்லை என்று ஐகோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் பதவி வகிப்பவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் தான், அவர்கள் ஒரு முடிவை எடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும். இல்லை திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் மீது எந்த முடிவு எடுக்கப்படவில்லை” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், “7 பேர் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு ‘பரோல்’ வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story