தங்கம் விலை அதிரடியாக பவுன் ஒன்றுக்கு ரூ.592 உயர்வு


தங்கம் விலை அதிரடியாக பவுன் ஒன்றுக்கு ரூ.592 உயர்வு
x
தினத்தந்தி 23 July 2020 4:32 PM IST (Updated: 23 July 2020 4:32 PM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு இன்று ஒரே நாளில் அதிரடியாக ரூ.592 உயர்வடைந்து உள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலை தொடர்ந்து உயர்ந்ததால், அந்த மாதம் 4ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன்பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 597க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 776க்கும் விற்பனை ஆனது.

இதன்பின் தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது.  கடந்த ஜனவரி 3ந்தேதி தங்கம் விலை மீண்டும் பவுன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆனது.  அன்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தங்கம் விலை அதிக அளவாக பவுனுக்கு ரூ.33 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆனது.  எனினும், மார்ச் மாதத்தில் இந்த விலை சற்று குறைய தொடங்கியது.  கொரோனா வைரசின் பாதிப்பு, பங்கு சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த மார்ச் 23ந்தேதி நிலவரப்படி ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616க்கு விற்பனை செய்யப்பட்டது.  எனினும், கொரோனாவால் மார்ச் 24ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்கம் விலை உச்சம் அடைய தொடங்கியது.  இந்த சூழலில், தங்கம் விலை இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.42 உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.32 உயர்ந்துள்ளது.  இதனால், இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.74 உயர்ந்துள்ளது.  இதனை தொடர்ந்து இன்றைய மாலை நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story