கொரோனா நோய் தொற்றில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


கொரோனா நோய் தொற்றில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை  - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 July 2020 8:29 AM GMT (Updated: 24 July 2020 8:29 AM GMT)

கொரோனா நோய் தொற்றில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டு என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் சுமார் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயல் ஆகும். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பான மத்திய அரசின் புள்ளிவிவரம் ஏற்புடையதாக இல்லை.

கொரோனா பரிசோதனையை அதிகரித்தால் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை முடிவு செய்ய முடியும். கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியத்துக்கு அடுத்து தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில் சமூகப் பரவல் இல்லை என்று கூறி நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது. தற்போது சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் எண்ணிக்கை கடுமையாக கூடி வருகிறது. பஸ்களையே பார்க்காத கிராமங்களில் கூட கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. நகர்ப்புறங்களில் இருக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் இல்லை.

கடந்த ஒருமாதத்திற்கு முன்பு வரை கொரோனா தொற்று என்றால் என்னவென்றே தெரியாத கிராமங்களில் இன்று மக்கள் ஒருவித அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமிழக சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் கிராமப்புற மக்களிடம் கொரோனா தொற்று பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து, சமூகப் பரவலில் இருந்து கிராமப்புற மக்களை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story