காற்றில் பறந்த உத்தரவு சமூக இடைவெளியை மறந்து காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்
சமூக இடைவெளி என்ற ஒன்றை மக்கள் அறவே மறந்து காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
சென்னை
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், காலை 3 மணி முதல் 8 மணி வரை மட்டுமே மீன் வியாபாரம் செய்யப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. அதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இதனால் பொதுமக்கள் அனைவரும் இன்றே இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு மீன்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் கூட்டம் அந்த பகுதியில் அலைமோதியது. மேலும் சமூக இடைவெளி என்ற ஒன்றை மக்கள் அறவே மறந்து இருப்பதையும் காண முடிந்தது. பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுப்பட்டனர்.
அங்குள்ள காவலர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களைக் கலைந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க சொல்லியும் அறிவுறுத்திய நிலையில் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டியதால் சமூக இடைவெளியே இல்லாமல் போனது.
மேலும் மீன் விற்பனை 3:00 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மீன் வியாபாரிகளை தவிர்த்து பொதுமக்கள் யாரும் உள்ளே வர கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அதையும் தாண்டி மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் கூடியிருந்தது.
மேலும் ஒரு நாளைக்கு 50 முதல் 70 விசைப்படகுகள் மட்டுமே மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Related Tags :
Next Story