பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை


பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
x
தினத்தந்தி 26 July 2020 2:09 AM IST (Updated: 26 July 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி உள்ளது.

சென்னை, 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் 7 வயது சிறுமி, தூத்துக்குடியில் 14 வயது சிறுமி, மயிலாடுதுறையில் 14 வயது சிறுமி என 3 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து இந்த ஆணையத்தின் உறுப்பினராக உள்ள ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

3 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஒரே நாளில் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளோம். குறிப்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த அச்சத்தை போக்க தமிழக காவல்துறையினருக்கு உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இது, பாராட்டத்தக்கது. அதேநேரம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தர தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்து கொள்கிறேன். ஊரடங்கு காலத்தில் மட்டும் 14 போக்சோ வழக்குகள் உட்பட 17 பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story