போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு அரங்கங்களில் எப்படி செயல்பட வேண்டும்? - அரசாணை வெளியீடு


போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு அரங்கங்களில் எப்படி செயல்பட வேண்டும்? - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 25 July 2020 9:25 PM GMT (Updated: 25 July 2020 9:25 PM GMT)

போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு அரங்கங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொடர்பான ஊரடங்கு காலகட்டத்தில் எப்படிப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கான வழிகாட்டிகளை மத்திய உள்துறை வகுத்தளித்துள்ளது. இந்தநிலையில் அரசுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வளாகங்கள் மற்றும் அரங்கங்களில் சர்வதேச மற்றும் தேச அளவிலான போட்டிகளுக்கு தயாராவதற்கான பயிற்சிகளை எடுப்பதற்காக விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

15 வயதுக்கு மேல், 50 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் மீண்டும் பயிற்சியை தொடங்கும்போது பின்பற்ற வேண்டிய செயல் நடைமுறைகளுக்கு அங்கீகாரம் அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கான செயல் நடைமுறைகள் அளிக்கப்படுகின்றன. அரசின் மறு உத்தரவு வரும்வரை உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்), நீச்சல் குளங்களை திறக்கக் கூடாது. அரங்கத்தின் அனைத்து பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு வீரரைப் பற்றிய தகவலும் பதிவு செய்யப்பட வேண்டும். ஒலிம்பிக், சர்வதேச மற்றும் தேச அளவில் பதக்கம் பெற்ற வீரர்கள், மற்றவர்களுடன் கலந்திராத வகையில் தனியாக பயிற்சி பெற வேண்டும். அரங்கத்துக்குள் வருவதற்கு முன்பு பணியாளர்கள், வீரர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பயிற்சி பெறுகிறவர்கள், பயிற்சி அளிப்பவர்கள் தங்களுக்கென்று சொந்த உபகரணங்களைக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story