இட ஒதுக்கீடு குறித்து ஐகோர்ட்டு தீர்ப்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு


இட ஒதுக்கீடு குறித்து ஐகோர்ட்டு தீர்ப்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 27 July 2020 10:34 PM GMT (Updated: 27 July 2020 10:34 PM GMT)

ஓ.பி.சி.யினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அ.தி.மு.க., தி.மு.க.உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) வழங்க சட்டம் நிறைவேற்றலாம் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் அளித்துள்ள கருத்துகளின் விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் -அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. தொடுத்த வழக்கில் இட ஒதுக்கீடு வழங்கப்பட எந்த ஒரு சட்ட ரீதியிலான தடையுமில்லை, இட ஒதுக்கீடு அளிக்கப்பட மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து அடுத்த கல்வியாண்டில் இருந்து இட ஒதுக்கீடு அளிக் கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து இருப்பதை அ.தி.மு.க. நன்றியோடு வரவேற்கிறது.

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. பணியாற்றுவதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதை பெருமையுடன் வரவேற்கிறோம். மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து இட ஒதுக்கீடு குறித்த முடிவை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு காலக்கெடு விதித்து இருப்பது இத்தீர்ப்பின் பலன்கள் விரைவில் நடைமுறைக்கு வர வகை செய்கிறது.

தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அயராது உழைப்போம் என்ற அ.தி.மு.க.வின் கொள்கைக்கு கிடைத்த பரிசாக இத்தீர்ப்பை போற்றி வரவேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி வரலாற்றில் இது ஒரு பொன்னாள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் குரல், சென்னை ஐகோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நாள். ஆம். இன்றைய தினம் (நேற்று), மாநிலங்கள் மத்திய தொகுப்பிற்கு அளிக்கும் மருத்துவக்கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு என்று, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரை கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

தி.மு.க. தொடுத்த சமூகநீதி சட்ட போராட்ட வழக்கில் இந்த தலைமுறை மட்டுமின்றி எதிர்கால தலைமுறையையும் முன்னேற்றி காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்றால் மிகையாகாது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்திய மருத்துவ கழகமும், மத்திய பா.ஜ.க. அரசும் கூட்டணி அமைத்து இழைத்து வந்த அநீதிக்கு ஒரு முடிவு கட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த தீர்ப்பினை பெற காரணமாக இருந்த மூத்த வக்கீல், மாநிலங்களவை உறுப்பினர் வில்சனுக்கு சிறப்பு பாராட்டுகளையும், அவர் உள்ளிட்ட வாதிட்ட மற்ற வக்கீல்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இடஒதுக்கீடு வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தீர்ப்பு. நாம் சுதந்திரம் பெற்றவுடன் தமிழ்நாட்டின் சமூக நீதி போராட்டத்தின் விளைவாக வந்த முதல் அரசியல் சட்டத்திருத்தம் போல், இன்றைக்கு 73 ஆண்டுகள் கழித்து வந்துள்ள சமூகநீதிக்கான சங்கநாதமாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.

இந்த தீர்ப்பினை ஏற்று கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 3 மாதம் வரை மத்திய அரசு காத்திராமல், உடனடியாக கமிட்டியை அமைத்து மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி குறிப்பாக தமிழகம் மத்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கும் மருத்துவ கல்வி, பல் மருத்துவம் மற்றும் மருத்துவ முதுநிலை கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே வழங்கிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


Next Story