மாநில செய்திகள்

அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் + "||" + Corona spread can be prevented and returned to normal only if government guidelines are followed - Request by Edappadi Palanisamy

அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அரசின் வழிமுறைகளை கடைபிடித்தால் தான் கொரோனா பரவலை தடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை மக்கள் கடைபிடித்தால் தான் கொரோனா பரவலைத் தடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், நிவாரணப் பணிகளை தீவிரமாக செய்தல், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசின் சார்பாக 58, தனியார் சார்பாக 61 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவுக்கான பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 63 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து 54 ஆயிரத்து 91 படுக்கைகளும், சிறப்பு மையங்களில் 64 ஆயிரத்து 903 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 25 ஆயிரத்து 538 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

ஐ.சி.யூ. வசதி கொண்ட (தனியார், அரசு இரண்டும் இணைந்து) 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் பிரத்யேகமாக கொரோனா தொற்று சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், முககவசங்கள், பாதுகாப்பு உடைகள், ‘எக்ஸ் ரே’ எந்திரங்கள் ஆகியவற்றை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக நாட்டிலேயே மிகக் குறைவான, அதாவது 1.6 சதவீதம் உயிரிழப்பு மற்றும் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 73 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டதில் பலர் பூரண குணமடைந்ததைக் கருத்தில் கொண்டு, அதை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக மறுமுறை உபயோகிக்கத் தகுந்த முககவசங்கள் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். இந்த முககவசங்கள், ஆகஸ்டு 5-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும். இதுவரை 46 லட்சம் முககவசங்கள் மாநகராட்சி மூலமாக சென்னையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

நோய்ப் பரவலைத் தடுக்க அரசு தொடர்ந்து கடும் முயற்சி செய்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இது கலெக்டர்களுடனான 8-வது ஆலோசனைக் கூட்டமாகும். அனைத்து கலெக்டர்களும் அரசின் ஆலோசனையை ஏற்று சிறப்பாக பணியாற்றியதால், கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதற்காக அவர்களுக்கும், இணைந்து பணியாற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகள். கடந்த 4 மாதங்களில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கொரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதைக் கட்டுப்படுத்த குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசையில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும் விலையில்லாமல் முககவசம் வழங்கப்பட்டது. தினமும் 500 முதல் 600 வரை காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 25 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. 14.50 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் விளைவாக, படிப்படியாக சென்னையில் கொரோனா நோய்த் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதன் காரணத்தினால் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பணிபுரிய விருப்பப்படுவதாக தொழில் நிறுவனத்தினர் தெரிவித்ததாக நீங்கள்(கலெக்டர்கள்) தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை கடைப்பிடித்தால் பரவலைத் தடுத்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.