மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 29 July 2020 10:27 PM GMT (Updated: 29 July 2020 10:27 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.

மேட்டூர், 

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,800 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 6 ஆயிரத்து 65 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 563 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை நீடித்து வருவதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு சற்று அதிகமாகவே உள்ளதால் அணை நீர்மட்டம் நேற்றும் சுமார் அரை அடி குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 65.08 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 64.69 அடியாக குறைந்தது.





Next Story