ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2020 7:58 PM GMT (Updated: 30 July 2020 7:58 PM GMT)

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஆர்.சுதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட சத்தான உணவு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் முட்டை, அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, சிறுதானியங்கள், வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்க ஒரு திட்டத்தை உருவாக்கவும், அம்மா உணவகங்களில் இலவச முட்டை வழங்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சத்துணவு கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, சத்துமாவு, முட்டை போன்ற பொருட்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக அவர்களின் வீடு தேடி சென்று வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் 33.12 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். இக்கட்டான தருணத்தில் மாணவர்களை தினமும் பள்ளிக்கு வரவழைத்து இலவசமாக முட்டை வழங்குவது என்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது” என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், “தற்போது பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் ஆசிரியர்கள் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முட்டை உள்ளிட்ட பொருட்களை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும் வாரத்தில் ஒருநாள் மொத்தமாக முட்டை வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஆகஸ்டு 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story