சமூக வளைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு; மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சமூக வளைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு; மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2020 9:36 AM GMT (Updated: 2020-07-31T15:06:33+05:30)

கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பான கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் கறுப்பர் கூட்டம் சேனலை நிர்வகித்து வந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசியல் தலைவர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிக்கப்படுவதாகவும் மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அதை பின்பற்றி இருந்தால், சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும் எனவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

Next Story