ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு


ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு
x
தினத்தந்தி 31 July 2020 10:00 AM GMT (Updated: 31 July 2020 10:00 AM GMT)

ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். நேரடி சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இணையதளங்களில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் பலர் இது போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விராட் கோலி, தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்களை தயாரித்து இளைஞர்களை மூளை சலவை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக வட்டிக்கு கடன் வாங்கி, அதை திருப்பி கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு, இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா ஆகியோரை கைது செய்யக் வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்த நிலையில், வரும் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story