இன்று பக்ரீத் பண்டிகைகவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இன்று பக்ரீத் பண்டிகைகவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 1 Aug 2020 12:50 AM GMT (Updated: 1 Aug 2020 12:50 AM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,


தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோகித்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஈகை திருநாளை முன்னிட்டு நம்முடைய அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்த, ஒரு சிறந்த தியாகமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சமுதாயத்தில் தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை மற்றும் இரக்கத்தின் மதிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் மனித குணத்தில் தெய்வீக நற்பண்புகளை நிலை நிறுத்துவதற்கு இந்த புனித நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

எடப்பாடி பழனிசாமி


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இறை உணர்வோடும், தியாக சிந்தனையோடும் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்த நன்னாளில், எனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த தியாக திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திடவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எழுச்சியுடன் கொண்டாடப்படும் தியாக பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தி.மு.க.வின் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமான இந்த பண்டிகை தருணத்தில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும், வளமும் பெற்று நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திடவேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறப்புத்தொழுகை, ஈகை ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் இரு கண்களாக பாவித்து நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும் இந்தத் தருணத்திற்குரிய சுய சுகாதார பாதுகாப்புகளுடனும் கொண்டாடிடவேண்டும் என்று வேண்டி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கட்சி தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,

எச்.வசந்தகுமார் எம்.பி. சு.திருநாவுக்கரசர் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்,

தேசியவாத காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கோல்டன் அபுபக்கர், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story