ஆடிப்பெருக்கு வெறிச்சோடிய கோவில்கள், நீர் நிலைகள்: வீடுகளிலேயே வழிபாடு நடத்திய பொதுமக்கள்


ஆடிப்பெருக்கு வெறிச்சோடிய கோவில்கள், நீர் நிலைகள்: வீடுகளிலேயே வழிபாடு நடத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Aug 2020 3:29 AM GMT (Updated: 2 Aug 2020 3:29 AM GMT)

தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மாதம் தோறும் நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஊரடங்கில் தொடர்ந்து தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டது. ஓட்டல்-டீ கடைகள் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் பார்சல்கள் மட்டுமே வாங்குகின்றனர். அதே போல் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோ-கார் இயக்கப்பட்டு வருகிறது.

தியேட்டர்கள், மால்கள் மற்றும் பூங்காக்கள் திறக்க இன்னும் அனுமதிக்கப்பட வில்லை. அதே போல் நகரில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு ஆகும்.

இந்தநிலையில் ஆடி பெருக்கான இன்று   (18-ந் தேதியன்று) பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.  நீர்நிலைகளுக்கு சென்று வழிபாடுகள் நடத்துவர். இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

ஆனால் முழு ஊரடங்கு காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை.  மேலும் இந்த முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆடி பெருக்கு நாளில் ஆறுகளில் நீராடிவிட்டு மேற்கொள்ளும் தாலி கயிறு மாற்றுதல், முளைப்பாரி விடுதல் உள்ளிட்டவை நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடுகளை நடத்தினர்.

பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி கரையோரங்களில் மக்கள் பெருந்திரளாக கூடுவர். ஆனால் இந்த முறை அனைத்து காவிரி கரையோர பகுதிகளில் கூடுதுறைகளில் பொதுமக்கள் வழிபாடு இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

பொது முடக்கத்தையும் மீறி மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெற காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடினர்.


Next Story