தமிழகத்தை மத யானை புகுந்து நாசம் செய்ய திட்டம்; புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழகத்தை மத யானை புகுந்து நாசம் செய்ய திட்டம்; புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்:  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Aug 2020 7:50 PM GMT (Updated: 2 Aug 2020 7:50 PM GMT)

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய கல்வி கொள்கை பற்றிய காணொலி கருத்து மேடை நேற்று நடந்தது. இதில் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, டாக்டர் எழிலன், கனிமொழி எம்.பி. உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. என்பது ஓர் அரசியல் கட்சி மட்டும் அல்ல. ஒரு தத்துவத்துக்கான அமைப்புமாகும். தமிழ் மக்களுக்காகப் போராடும் அமைப்பு என்று நீங்கள் உணர்ந்து இதில் பங்கெடுத்துள்ளர்கள். இந்த கல்வி கொள்கை இப்படித்தான் மிக மோசமானதாக இருக்கும் என்று இன்று நேற்றல்ல; நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தலைவர் கருணாநிதி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எதையெல்லாம் சொல்லி பயந்தாரோ; அதுதான் இன்று புதிய கல்வி கொள்கையாக வந்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்ய திட்டமிட்டு இருப்பதை தான் இப்போது நாம் பார்க்கிறோம்.

கருணாநிதி நமக்கு கற்று கொடுத்த சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம், ஒடுக்கப்பட்டோர் உரிமை, தமிழர் இன நலன், தமிழ்மொழி காப்பு, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம், தமிழக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த புதிய கல்வி கொள்கையை அலசி ஆராய்ந்ததில், இதில் சொல்லப்பட்ட எந்த தத்துவத்துக்கும் உடன்பாடானதாக இந்த கல்வி கொள்கை இல்லை. எனவேதான், இந்த கல்வி அறிக்கை குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தி.மு.க.வின் சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அந்த குழுவில் 10 கல்வியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள்.

புதிய கல்வி கொள்கையில் 400-க்கும் மேற்பட்ட பக்கங்களை இவர்கள் அலசி ஆராய்ந்து, ஓரு அறிக்கையை கொடுத்தார்கள். அதில் கல்வி கொள்கை காவிமயமாக்கலாக உள்ளது. வேத கலாசாரத்தை திணிப்பதாக உள்ளது. சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி குறித்து கவலைப்படவில்லை. இப்படி பல்வேறு பரிந்துரைகளை சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது.

28.7.2019 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிக்கு, தி.மு.க. எம்.பி.க்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று இந்த அறிக்கை தரப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கையை மொத்தமாக திரும்பப்பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாம் மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் இந்த கோரிக்கையை வைத்தார்கள். ஆனால் அது எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்த கொள்கையை அமல்படுத்தி விட்டது.

மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லி இருக்கிறார். இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள் என்று பிரதமருக்கு தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம் என்கிறார் பிரதமர். இல்லை. இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கி இருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன். இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்த புதிய கல்வி கொள்கை உருவாக்கும் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இவற்றை தி.மு.க. எதிர்ப்பதைப்போல அனைத்து கட்சிகளும் எதிர்க்கவேண்டும். குறிப்பாக ஆளும் கட்சி எதிர்க்கவேண்டும். புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு மறுக்கவேண்டும், நிராகரிக்கவேண்டும். அண்ணாவின் திருப்பெயரை கட்சியின் பெயரில் இணைத்து கொண்டிருக்கும் அ.தி.மு.க., மும்மொழி கொள்கையை கொண்ட புதிய கல்வி கொள்கையை எதிர்க்காமல் மவுனம் சாதிக்கக்கூடாது. அப்படி மவுனமாக இருந்தால்; அது பேரறிஞர் அண்ணாவின் பெயருக்கு அவமானம்.

அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு பயந்து தமிழ்நாட்டு மக்களின், மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடாதீர்கள். ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகளை மதிக்காமல், யார் பேச்சையும் கேட்காமல் ஊரடங்கு காலத்தில் மறைமுகமாக புகுத்தப்படும் இந்த கல்வி கொள்கையை இறுதிவரை எதிர்ப்போம். அனைவருக்குமான கல்வி என்பது நமது இலக்கு. 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியால் விதைக்கப்பட்ட விதை, சமூகநீதி கல்வி. நீதிக்கட்சியால் விதைக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராஜரால் பள்ளி கல்வியாக பயிராகி, கருணாநிதியால் கல்லூரி கல்வியாக மரமாகி, இன்று தமிழ்நாட்டு மாணவ செல்வங்கள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் அறிவு சக்தியாக திகழ்கிறார்கள். அத்தகைய கல்வி ஒளியை அணைய விடமாட்டோம். அதனை அணைக்க நினைப்பவர்களிடமிருந்து, தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் கல்வி ஒளியை காப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Next Story