216-வது நினைவு தினம்: தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி


216-வது நினைவு தினம்:  தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு, மு.க.ஸ்டாலின் அஞ்சலி
x
தினத்தந்தி 2 Aug 2020 9:45 PM GMT (Updated: 2 Aug 2020 8:29 PM GMT)

தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டுப்பற்றுக்கும்,வீரத்துக்கும் இன்றைக்கும் தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும் தீரன் சின்னமலை நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது; பெருமைக்குரியது. ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்து கைப்பற்றியபோது, சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக சொல் என்று துணிச்சலாக சொன்னவர். இளைஞர்களின் கனவு நாயகராக திகழும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு பெருமை சேர்த்திட, சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த தி.மு.க. ஆட்சிதான்.

நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதும் தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். கொங்கு மண்டல இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் கருணாநிதிதான். மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்படவேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க தி.மு.க. என்றைக்கும் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியை அவருடைய இந்த நினைவு நாளில் சபதமாக எடுத்துக்கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேயர்களை அஞ்சவைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவுநாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அந்த தீரனுக்கு நாம் நமது வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம். தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்படவேண்டும்.

தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Next Story