எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை; இந்த வாரம் தொடங்குகிறது


எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை; இந்த வாரம் தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Aug 2020 2:19 AM GMT (Updated: 3 Aug 2020 2:19 AM GMT)

எஸ்.ஆர்.எம். தனியார் ஆஸ்பத்திரியில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இந்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியை, பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கோவேக்சின் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள 12 ஆராய்ச்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதியுடன் முதல்கட்ட பரிசோதனையை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. இம்முறையில் தடுப்பூசியின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வண்ணம் உறுதியுடன் 30 வகைகளில் குறிப்பிட்டபடி நல்ல திடகாத்திரமான வகையில் உள்ள 18 வயது முதல் 55 வயதுடைய நபர்களை கொண்டு முதல்கட்ட பரிசோதனையை துவங்கியுள்ளதாக எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் சத்தியஜித் மஹோபத்ரா மற்றும் மருந்தியல் இணைப் பேராசிரியர் டாக்டர் மெல்வின் ஜார்ஜ் தெரிவித்தனர்.


இந்த முதல்கட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் தற்போது வரை நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ளனர் எனவும், இவர்களுக்கு வரும் வாரங்களில் 2-ம் கட்ட தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகவும் இவர்களின் முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உடன் ஒருங்கிணைந்து முழுமையான மதிப்பீட்டை சரிபார்த்து பின் தற்போது 2-ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது.

12 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான 100 தன்னார்வலர்களுக்கு பொது சுகாதார நிலை பரிசோதித்தும், கொரோனா வைரஸ் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பே இந்த 2-ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதன்பின் 2-ம்கட்ட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 நிலைகளில் இவர்களை மருத்துவ ஆராய்ச்சி குழு கண்காணிக்கும் எனவும், இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உருவாக்கி அதன் செயல்பாடு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்குமா? என ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, அனுபவம் மற்றும் தலை சிறந்த ஆராய்ச்சி உபகரணங்கள் கூடிய ஆராய்ச்சி கூடங்கள் என பலவிதங்களில் சிறந்து விளங்குவதால் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டதாக கல்லூரி சார்பு துணைவேந்தர் டாக்டர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.


Next Story