அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு


அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 4 Aug 2020 7:04 AM GMT (Updated: 4 Aug 2020 7:04 AM GMT)

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. .பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழையும் மற்றும் தேனி மாவட்டத்தின் மலை பகுதிகளில் கன மழையும், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான், கேரளா - கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு மற்றும் மராட்டியம், கோவா, தென்மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மேற்கண்டல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 05-08-2020 இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.1 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story