சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவு வெளியீடு; சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 29 பேர் வெற்றி


சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவு வெளியீடு; சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 29 பேர் வெற்றி
x
தினத்தந்தி 4 Aug 2020 8:18 PM GMT (Updated: 4 Aug 2020 8:18 PM GMT)

சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவில், நாடு முழுவதும் 829 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 29 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்பட 26 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி முடிவு வெளியிடப்படும். அதன்படி, 2019-ம் ஆண்டுக்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியானது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 180 ஐ.ஏ.எஸ்., 24 ஐ.எப்.எஸ்., 150 ஐ.பி.எஸ். உள்பட 927 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி நடந்தது. அதற்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அடுத்த கட்டமாக முதன்மைத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி தொடங்கி, 5 நாட்கள் நடந்தது.

அதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சிலருக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து நேர்முகத்தேர்வு நடந்து முடிந்தது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இறுதி தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதில் நாடு முழுவதும் 829 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுப்பிரிவில் 304 பேரும், ஓ.பி.சி. பிரிவில் 251 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 78 பேரும், எஸ்.சி. பிரிவில் 129 பேரும், எஸ்.டி. பிரிவில் 67 பேரும் என மொத்தம் 829 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மத்திய அரசுப்பணிகளில் உள்ள குரூப்-ஏ, குரூப்-பி உள்பட பல்வேறு பணிகளை தக்கவைத்து இருக்கின்றனர். இதுதவிர 182 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் இடம் பிடித்த 829 பேரில், முதல் இடத்தை பிரதீப் சிங்கும், ஜாட்டின் கிஷோர் 2-வது இடத்தையும், பிரதீபா வெர்மா 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 29 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மனிதநேய இலவச கல்வி மைய இயக்குனர் மா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம், தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு பயிற்சி அளித்து வருகிறது. அந்தவகையில் இங்கு பயிற்சிபெற்று, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற மத்திய அரசு பணிகளிலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 போன்ற இதர பணிகளிலும் இதுவரை 3 ஆயிரத்து 505 பேர் வெற்றி அடைந்து பதவிகளில் உள்ளனர்.

அதன்படி, 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் தயாராகும் வகையில் அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. அதிலும் குறிப்பாக நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்றுனர்கள் மூலம் மாதிரி நேர்முகத்தேர்வு, மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை, டெல்லி சென்று வருவதற்கு விமான பயண கட்டணம் வழங்கப்பட்டது.

இதனை பயன்படுத்தி, மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 16 மாணவிகள், 13 மாணவர்கள் என மொத்தம் 29 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் அகில இந்திய அளவில் ஆர்.ஐஸ்வர்யா 47-வது இடத்தையும், எஸ்.பிரியங்கா 68-வது இடத்தையும், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பேத்தி எம்.பிரித்திகாராணி 171-வது இடத்தையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி எம்.பூர்ணசுந்தரி 286-வது இடத்தையும் பிடித்தனர்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்ற 29 பேரிடமும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

Next Story