திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு


திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 7:56 AM GMT (Updated: 5 Aug 2020 7:56 AM GMT)

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

திமுகவின் தலைமை நிலைய அலுவலகச் செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கு.க.செல்வம் நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லிக்கு சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் பேசிய போது, “அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். எனது ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைப்பதற்காக டெல்லி வந்தேன். அப்போது, பாஜக தலைவர் நட்டாவையும் சந்தித்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடிக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி சம்பந்தமான கோரிக்கையை வலியுறுத்தவே பாஜக தலைவரை சந்தித்தாகவும் தெரிவித்தார். மேலும், “என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று கு.க.செல்வம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கு.க.செல்வத்தை திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதையொட்டி, அவரைத் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story