அதிமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா? - எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி


அதிமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தை திருப்பி அளிக்கத் தயாரா? - எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 5 Aug 2020 8:34 AM GMT (Updated: 2020-08-05T14:04:14+05:30)

5 ஆண்டுகள் அதிமுக எம்.எல்.ஏ.,வாக பணியாற்றிய போது வாங்கிய ஊதியத்தையும், தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் எஸ்.வி.சேகர் திருப்பி அளிக்க தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், “அதிமுகவைப் பொறுத்த வரை ஜனநாயகம் தழைத்தோங்கும் கட்சி. ஆனால் திமுகவில் சர்வாதிகாரம் நடக்கிறது. அந்த குடும்ப ராஜ்ஜியத்தில் அதிருப்தியின் வெளிப்பாடுதான் கட்சித் தொண்டர்களின் குமுறல். அதன் வெளிப்பாடுதான் கு.க.செல்வம் வெளியே வந்துள்ளார்” என்றார்.

இதனையடுத்து, “அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்” என்று கூறி எஸ்.வி.சேகர் வெளியிட்ட சர்ச்சை வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அம்மாவால், அதிமுக கொடியை, அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், ஐந்து வருட சம்பளத்தை அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். தற்போது எம்.எல்.ஏ. பென்சன் வாங்குகிறார். அதையும் இவர் திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறாரா? இவை இரண்டுக்கும் அவர் முதலில் பதில் சொல்லட்டும். ஆதாரம் இல்லாமல் அவர் பேசும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது” என்று தெரிவித்தார்.

Next Story