மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்; பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்; பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 5 Aug 2020 12:30 PM GMT (Updated: 2020-08-05T18:00:39+05:30)

மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை தொடர்ந்து, மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட நடமாடும் காய்ச்சல் முகாம்களால், கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த ஜுன் 24 மாதம் இரட்டை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை, சுமார் 40 நாட்கள் உச்சத்திற்கு பின் மீண்டும் குறைந்துள்ளது.

இதுவரை 4,348 நடமாடும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அதில் 2,39,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைந்துள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மதுரை வருகிறார். அவரது வருகை குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக உச்சநிலையிலேயே இருந்த கொரோனா வைரஸின் தாக்கம் ஆறுதல் தரக்கூடிய வகையிலே படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது.

தினமும் சராசரியாக 400 பேருக்கு தொற்று வந்துகொண்டிருந்த நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. அதே 3500 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது.

முதல்வர் பழனிசாமி இன்று சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முடிவுற்றப் பணிகளை துவக்கிவைத்தும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு மதியம் மதுரை மாவட்டம் வருகிறார் என கூறினார்.

Next Story