தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உயர்வு - மத்திய புள்ளியியல் நிறுவனம் தகவல்


தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உயர்வு - மத்திய புள்ளியியல் நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:00 PM GMT (Updated: 7 Aug 2020 9:35 PM GMT)

கடந்த 3 ஆண்டுகளாக தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.

சென்னை, 

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2019-2020-ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சியைவிட அதிக வளர்ச்சியை காட்டியுள்ளது. இப்படி தேசிய பொருளாதார வளர்ச்சியைவிட அதிக வளர்ச்சியை தமிழகம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக எட்டி இருக்கிறது.

அந்த வகையில் 3-வது ஆண்டான 2019-2020-ம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய 2 மடங்கு அதிகமாகும்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவன கணக்கெடுப்பை சமீபத்தில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-2012-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் (ஜி.எஸ். டி.பி.) கணக்கிடப்பட்டது.

ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் நிலையாக இருக்கிறது. மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.

வேளாண்மை, அதன் உப தொழில்கள், சுரங்கத்தொழில் ஆகியவை அடங்கிய முதன்மை தொழில்கள் பிரிவு 6.08 சதவீத வளர்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைப்பிரிவு தொழில்கள் 6.63 சதவீத வளர்ச்சியையும் காட்டுகின்றன. இவற்றின் முந்தைய ஆண்டு வளர்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.

உற்பத்தி மற்றும் கட்டுமானத்தொழில் பிரிவுகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த தொழில்கள் அடங்கிய இரண்டாம் நிலைப்பிரிவு தொழில்களின் வளர்ச்சி விகிதம் 10.02 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டில் 6.49 சதவீதமாக இருந்தது.

மீண்டெழ அறிகுறி

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மீண்டெழுந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக கொரோனா பரவல் ஏற்பட்டு 2019-2020-ம் நிதியாண்டின் இறுதிக்கட்டத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்திவிட்டது என்று தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

முதன்மை தொழில் பிரிவை தவிர மற்ற 2 பிரிவுகளும் கடந்த ஆண்டைவிட நல்ல வளர்ச்சியை காட்டியுள்ளன. ஆனாலும் முதன்மை பிரிவில் உள்ள வேளாண்மையில் 2018-2019-ம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளர்ச்சி விகிதம், இந்த முறை 7.43 சதவீதமாக வளர்ந்திருக்கிறது.

எந்த ஆண்டில் எவ்வளவு உயர்வு?

சேவை பிரிவை பொறுத்த அளவில், நிதி சேவைகள் 11.71 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இது 2018-2019-ம் ஆண்டில் 2.21 சதவீதமாக மிகக்குறைவாக இருந்தது. ரியல் எஸ்டேட் தொழிலை பொறுத்த அளவில் கடந்த ஆண்டில் அதன் வளர்ச்சி 6.69 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. அது தற்போது 7.29 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

2012-2013-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.7 லட்சத்து 92 ஆயிரம் கோடியாகவும், வளர்ச்சி விகிதம் 5.37 சதவீதமாகவும் (தேசிய வளர்ச்சி விகிதம் 5.5) இருந்தது. அதைத்தொடர்ந்து வந்த 2013-2014-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.8 லட்சத்து 52 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 6.4); 2014-2015-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 4.92 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 7.4); 2015-2016-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.9 லட்சத்து 68 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 8.24 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 8);

2016-2017-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.10 லட்சத்து 37 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 7.15 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 8.3); 2017-2018-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.11 லட்சத்து 26 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 8.59 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 7); 2018-2019-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 7.95 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 6.1); 2019-2020-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி.பி.யின் மதிப்பு ரூ.13 லட்சத்து 13 ஆயிரம் கோடி, வளர்ச்சி விகிதம் 8.03 சதவீதம் (தேசிய வளர்ச்சி விகிதம் 4.2) என்று அமைந்துள்ளது.

அந்த வகையில் கடைசி 3 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட தொடர்ந்து அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story