நீலகிரி, கோவை, தேனியில் 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


நீலகிரி, கோவை, தேனியில் 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2020 10:15 PM GMT (Updated: 7 Aug 2020 9:41 PM GMT)

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, 

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் உள் கர்நாடகா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. அதிலும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்கிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 58 செ.மீ. மழை கொட்டியது.

அதன் தொடர்ச்சியாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மற்றும் கூடலூரில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தென் மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதிகனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 8-ந்தேதி (இன்று) கேரளா, கடலோர கர்நாடகா, தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தேவாலா 36 செ.மீ., அவலாஞ்சி, கூடலூர் பஜார் தலா 35 செ.மீ., மேல் கூடலூர் 33 செ.மீ., செருமுள்ளி 32 செ.மீ., சின்னக்கல்லாறு 31 செ.மீ., சின்கோனா 29 செ.மீ., மேல்பவானி 26 செ.மீ., பந்தலூர், பார்வுட் எஸ்டேட் தலா 25 செ.மீ., சோலையாறு 24 செ.மீ., வால்பாறை 23 செ.மீ., நடுவட்டம் 22 செ.மீ., பெரியார் 20 செ.மீ. என பல இடங்களில் மழை பெய்துள்ளது.


Next Story