10-ந் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு


10-ந் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு - ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 1:21 AM GMT (Updated: 8 Aug 2020 1:21 AM GMT)

10-ந் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்போடு இணைந்து கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்கு ஆதரவாக வருகிற 10-ந் தேதி கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் த.கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வெளிமாவட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் இருப்பதால், அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு ஆலோசிக்க முடியவில்லை. மேலும், வருகிற 12-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, கடை அடைப்பு போராட்டத்தை தவிர்த்துவிடுமாறு அறிவுறுத்தினர்.

மேலும், முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் சென்னை திரும்பியதும் அவர்களுடன் ஆலோசனை நடத்தி கோயம்பேடு வணிக வளாக திறப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, வருகிற 10-ந் தேதி அறிவித்து இருந்த கடை அடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story