பி.ஆர்க் படிப்பில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்-அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


பி.ஆர்க் படிப்பில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்-அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2020 9:45 PM GMT (Updated: 8 Aug 2020 9:45 PM GMT)

பி.ஆர்க் படிப்பில் சேர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவி ஷிவானி அருண் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பி.ஆர்க் என்ற கட்டிடக்கலை படிப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதன்படி, கிண்டியில் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் படிக்க விரும்பினேன்.

ஆனால், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதித்து உத்தரவிடவில்லை என்று கூறப்பட்டது. இதனால், ஆன்லைன் மூலம் பி.ஆர்க் படிப்பில் விண்ணப்பிக்க முடியாதநிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இடஒதுக்கீடு வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு என்பது, அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்க வேண்டுமா? அல்லது கூடுதலாக வழங்க வேண்டுமா? என்பதை டெல்லியில் உள்ள இந்திய கட்டிடக்கலை கவுன்சில் அறிவிக்கவில்லை.

அதனால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை” என்று கூறினார். ஆனால், “அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில் 15 சதவீதம் இடஒதுக்கீட்டை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டே அனைத்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்று கட்டிடக்கலை கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், “கட்டிடக்கலை கவுன்சில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பி.ஆர்க் படிப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் 2 வாரத்துக்குள் அறிவிப்பாணை வெளியிடவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story