‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி


‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2020 12:59 AM GMT (Updated: 9 Aug 2020 12:59 AM GMT)

தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளதாக அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கு.க.செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார்.

அவர் பேசுகையில், அடிப்படையில் தான் ஒரு ஆன்மிகவாதி என்றும், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை தனது தொகுதியின் கோரிக்கை தொடர்பாக சந்திக்கவே டெல்லி சென்றதாகவும், அப்போது மரியாதை நிமித்தமாக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராமர் கோவில் கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் அவர், அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்கட்சி தேர்தலில் தன்னை அழைத்து ஜெ.அன்பழகனுக்காக கட்சி பதவியை விட்டுத்தர கேட்டுக்கொண்டதால் அப்போது விட்டுத்தந்தேன் என்றும், தற்போது அவரது பேரனுக்காகவும் விட்டுக்கொடுக்க சொன்னால் எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

அவர்கள் குடும்பத்தினரும், அவர்களுக்கு வேண்டியவர்களும் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், என்னை போன்றவர்களுக்கும் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் நடக்கும் பல விஷயங்களை பொது வெளியில் தெரிவிக்க போவதாகவும், தன்னை போல் மன உளைச்சலில் இருக்கும் பலர் கட்சியை விட்டு வெளியேற உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் திராவிட கட்சிகளின் எதிர்காலம், தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கம் உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் பல கேள்விகளுக்கு தெளிவாக அவர் பதில் அளித்துள்ளார்.

Next Story