சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது - 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன


சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது - 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன
x
தினத்தந்தி 9 Aug 2020 10:43 PM GMT (Updated: 9 Aug 2020 10:43 PM GMT)

சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

சென்னை, 

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்காக தென்கொரியாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் சில விதிமீறல்களால் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சென்னை மணலியில் உள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் அவற்றை வைத்து இருந்தனர். 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு இருந்த இந்த அமோனியம் நைட்ரேட் மழைநீர் மற்றும் ஆவியானதால் 43 டன் குறைந்து தற்போது 697 டன் இருந்தது.

இந்த 697 டன் அமோனியம் நைட்ரேட்டும் கடந்த பிப்ரவரி மாதம் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு இருந்தது. இதனை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு எடுத்திருந்தது. ஆனால், அதற்கான பணத்தை செலுத்தாததால், அதனை சென்னையில் இருந்து எடுத்து செல்லப்படாமல் மணலியில் உள்ள சரக்கு கன்டெய்னர் முனையத்திலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சென்னை மணலியில் சுங்க இலாகா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட் பற்றிய தகவல் அப்பகுதி மக்களுக்கு கிடைத்ததும் அச்சம் அடைந்தனர்.

இதனால், தீயணைப்பு, சுற்றுச்சூழல், வெடிமருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக அப்புறப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

அதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, நேற்று சுங்கத்துறை இணை ஆணையர்கள் டி.சமய முரளி, பழனியாண்டி, வெடி மருந்து பாதுகாப்புத்துறை இணை இயக்குனர் சுந்தரேசன், தீயணைப்புத்துறை இணை ஆணையர் பிரியா ரவிச்சந்திரன், மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணிப்பில் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அனுப்பும் பணி நடந்தது.

நீண்ட நாட்களாக கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு இருந்த அமோனியம் நைட்ரேட்டின் வீரியம் தற்போது எவ்வாறு உள்ளது?. அதனை லாரிகளில் எடுத்து செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமா? என்பது உள்பட பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். சுற்றுச்சூழல் துறை, தீயணைப்புத்துறை என பல ஒப்புதல்கள் பெற வேண்டியது இருந்ததால், புறப்படுவதில் தாமதமாகியது. பிற்பகல் 3.20 மணியளவில் 10 கன்டெய்னர் லாரிகள் 181 டன் அமோனியம் நைட்ரேட்டுடன் ஐதராபாத்துக்கு புறப்பட்டன.

இந்த வாகனங்களுக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. மேலும், ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் தனியார் பாதுகாவலர்கள் தலா ஒருவர் அமர்ந்து இருந்தனர். ஐதராபாத்திற்கு அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அங்கிரெட்டி பள்ளி கிராமத்திற்கு கன்டெய்னர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. நேற்று தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், இந்த வாகனங்கள் போக்குவரத்து தடை ஏதும் இன்றி விரைவாக சென்றன.

எஞ்சியிருக்கும் 27 கன்டெய்னர்களும் ஓரிரு நாளில் கொண்டு செல்லப்படும்.


Next Story