மாநில செய்திகள்

‘நீங்கள் இந்தியரா?” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம் + "||" + ‘Are you Indian?’ CISF officer asked Kanimozhi MP - BJP leader criticizes election campaign

‘நீங்கள் இந்தியரா?” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்

‘நீங்கள் இந்தியரா?” என்று கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட சி.ஐ.எஸ்.எப். அதிகாரி - தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டதாக பாஜக தலைவர் விமர்சனம்
திமுக எம்.பி. கனிமொழியிடம் மொழி குறித்து சி.ஐ.எஸ்.எப். அதிகாரி கேட்டது தொடர்பாக பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷ் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக  நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை முடித்து செல்லும்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் கூறினார்.


ஆனால், கனிமொழி எம்.பி.யோ, “எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என்றார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி ‘நீங்கள் இந்தியரா?’ என்று கனிமொழியிடம் கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, கனிமொழி எம்.பி. டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு இந்தி தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியிடம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு விமான நிலையத்தில் வைத்து கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியர் தானே? என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில், “உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான் இருக்கிறது. இப்போது இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...