தமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Aug 2020 10:29 PM GMT (Updated: 10 Aug 2020 10:29 PM GMT)

தமிழகத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை, 

தமிழகத்தில் நேற்று மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன், குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா

தமிழகத்தில் ஏழை, எளியவர்கள் முதல் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே 4 அமைச்சர்கள், 23 எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 எம்.பி.க்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் (வயது 47); மற்றொருவர் கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து சரவணன் நேற்று காலை மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சரவணன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “கொரோனா தொற்று காரணமாக, டாக்டர்களின் ஆலோசனைப்படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டு இருந்தது.

குளித்தலை ராமர்

குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ.வும், தோகைமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான ராமருக்கு, கடந்த 3 நாட்களாக சளி, இருமல் இருந்தது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ராமருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. ராமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த தாங்கள் பூரண குணமடைந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற நலம் பெற வேண்டும், என்று அவரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மேலும் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. ஆகியோரும் தொலைபேசியில் ராமரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.

Next Story